வில்வித்தை: அரையிறுதியில் மதுரா

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை அரையிறுதிக்கு இந்தியாவின் மதுரா முன்னேறினார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதன் காலிறுதியில் இந்தியாவின் மதுரா, ஜோதி மோதினர். இதில் மதுரா 142-141 என திரில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ரிஷாப், டென்மார்க்கின் மதியாஸ் மோதினர். இப்போட்டி 147-147 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' ரிஷாப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நழுவிய பதக்கம்
ரிகர்வ் ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், அடானு தாஸ் இடம் பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் பிரான்சை சந்தித்தது. இதில் இந்திய அணி, 'ஷூட் ஆப்' முறையில் 4-5 என வீழ்ந்தது. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 3-5 என அமெரிக்காவிடம் தோற்க, பதக்கம் நழுவியது.
பெண்களுக்கான பிரிவில் தீபிகா குமாரி, அன்கிதா, அன்ஷிகா இடம் பெற்ற இந்திய அணி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றது. இதில் மெக்சிகோவிடம், 'ஷூட் ஆப்' முறையில் 4-5 என தோற்று வெளியேறியது.

Advertisement