'பந்த்' அறிவிப்பை திரும்ப பெற அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதுச்சேரி: இண்டியா கூட்டணி கட்சிகள் 'பந்த்' அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் மரணமடைந்த 16-ம் நாளில் அதற்கு காரணமானவர்களுக்கு மரணம் என்ற தண்டனையை நம் ராணுவம் அளித்திருப்பது பொருத்தமானது.
இந்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் வரும் 20ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி கட்சிகள், அரசியல் ஆதாயத்திற்காக 'பந்த்' அறிவித்துள்ளன.
நாட்டில் போர் சூழல் நிலவி வருவதால், இண்டியா கூட்டணி கட்சிகள் 'பந்த்' அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். காங்., கட்சி ஒரு காலி டப்பா, ஓட்ட தள்ளு வண்டி என பொதுவெளியில் தி.மு.க.,வினர் கூறி வந்தனர். இதற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கமும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், காங்., தலைவர் வைத்திலிங்கம், தள்ளுவண்டி, ஓட்டவண்டி என தி.மு.க.,வினர் யாரை சொன்னார்கள் என்று தெரியவில்லை என, கூறியிருப்பது பயத்தின் வெளிப்பாடா அல்லது சந்தரப்பவாத பெருந்தன்மையா என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.