'நஞ்சில்லா விளை பொருள் என்பது விவசாயிகள் கடமை'

பல்லடம்: 'நஞ்சில்லாத விளைபொருட்களை விளைவிக்க வேண்டியது விவசாயிகளின் கடமை' என, பல்லடத்தில் வனாலயத்தில் நடந்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

பல்லடம் வனம் அமைப்பு மற்றும் ஈஷா அறக்கட்டளை சார்பில், தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். தலைவர் சின்னசாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கேத்தனுார் இயற்கை விவசாயி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், 'பல ஆண்டுகளாக ரசாயன விவசாயம் செய்வதால், எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தேவை. இதற்காக முதலில் மண்ணை வளப்படுத்தியாக வேண்டி உள்ளது. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு வர உரிய வழிகாட்டுதல் தேவை. இதைத்தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் செய்து வருகிறது.

இயற்கை விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும். காய்கறி விளைவிப்பது, மண்ணை பராமரிப்பது, விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதல் என, அனைத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

நஞ்சில்லாத விளை பொருட்களை விளைவிக்க வேண்டியது விவசாயிகளின் கடமை. சரியான பயிற்சியும், முயற்சியும் எடுத்தால் அனைவரும் இயற்கை விவசாயியாக உருவெடுக்கலாம். காய்கறிகளை மருந்தாக பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

நஞ்சில்லாத உணவை சாப்பிடுவோம் என்ற எண்ணம் முதலில் விவசாயிகளுக்கு வந்து விட்டால், அனைத்தும் மாறிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பூச்சி செல்வகுமார், மருத்துவர் அருண் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினார்.

Advertisement