பழைய குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

வால்பாறை; வால்பாறை நகரில் பழைய குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி நடக்கிறது.

வால்பாறை நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக்டேமிலிருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கோ-ஆப்ரெடிவ் காலனியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து, வால்பாறை நகர், அண்ணாநகர், காந்திநகர், கக்கன் காலனி உள்ளிட் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனை, கடைகள், தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து பகுதிக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குழாய் மிகவும் பழமையாக இருப்பதாலும், பல்வேறு இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதாலும், நகராட்சி சார்பில் புதிய குழாய் அமைக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணியை, நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் கோபிகா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும். அதன்பின், வால்பாறை நகரில் குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement