சுறுசுறுப்பு இல்லாத விளையாட்டு ஆணையம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்தும், விளையாட்டு துறையில் எதிர்பார்த்த அளவில், முன்னேற்றம் தென்படாததால், மாநில அரசு எரிச்சலில் உள்ளது.

கர்நாடகாவில் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்கு, மாநில அரசு முக்கியத்துவம் தருகிறது. ஏற்கனவே விளையாட்டு கமிட்டி செயல்படுகிறது. இக்கமிட்டி சார்பில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் நிர்ணயித்த நேரத்தில் கூட்டம் நடத்த வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களை, விரிவாக ஆய்வு செய்து, விளையாட்டு துறையை மேம்படுத்துவது, ஆணையத்தின் பணியாகும்.

முன்னேற்றமில்லை



ஆனால், மாநில அரசு எதிர்பார்த்த அளவில், பணிகள் நடக்கவில்லை. விளையாட்டு துறையில் முன்னேற்றம் தென்படவில்லை. இதனால் அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

துறையின் முன்னேற்றம் குறித்து, தெரிந்து கொள்ளும் நோக்கில், சில நாட்களுக்கு முன், அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

அதில் முதல்வர் பேசியதாவது:

விளையாட்டு ஆணையம் அமைத்தும், துறையில் முன்னேற்றம் தென்படவில்லை. ஆணையம் அமைத்ததற்கான நோக்கமே நிறைவேறவில்லை என்றால், இதை அமைத்து என்ன பயன். விளையாட்டு ஆணையம், காலா காலத்துக்கு ஆலோசனை நடத்த வேண்டும். இந்தியாவில் உள்ள விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தசரா போட்டிகள்



இத்தகைய விளையாட்டுகளை, நமது மாநிலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஐந்தாறு மாதங்களில் தசரா விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதற்குள், ஆணையம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நிர்ணயித்த விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க, நிதித்துறை ஒப்புதல் அளித்தும், பயிற்சியாளர்களை நியமிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளீர்கள்.

பயிற்சியாளர்கள் 176 பேரை நியமிக்கும்படி, நான் உத்தரவிட்டு ஓராண்டு கடந்துள்ளது. இதுவரை ஏன் நியமிக்கவில்லை. இத்தகைய மனப்போக்கை என்னால் சகிக்க முடியாது. தேசிய விளையாட்டுகளுக்கு நிதியுதவி நிர்ணயிக்கப்படும்.

சர்வதேச அளவிலான விளையாட்டுகள் ஏற்பாடு செய்யும் முன், இதில் குறைந்தபட்சம் 15 நாடுகள் பங்கேற்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின் சரியான முறையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பெயரளவில் தேசிய, சர்வதேச விளையாட்டுகள் நடத்தும் நிறுவனங்களை தவிர்த்து விடுங்கள். நேர்மையான முறையில் விளையாட்டு போட்டிகள் நடத்துவோரை ஊக்கப்படுத்த வேண்டும்.

'ஏசி' மயம்



கம்பாலா விளையாட்டை, கிராமிய விளையாட்டு என்ற அங்கீகாரம் அளித்து, ஊக்கமளிக்க அரசு விரும்புகிறது. விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறித்து, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கத்தை, 'ஏசி' மயமாக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.

விளயாட்டு வீரர்களுக்கு, ஊட்டச்சத்தான உணவு வழங்க வேண்டும். இவர்கள் தங்கியுள்ள ஹாஸ்டல்களுக்கு திடீரென சென்று, ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


இவ்வாறு அவர் பேசினார்

- நமது நிருபர் -.

Advertisement