26 இடங்களில் புதிய மணல் குவாரிகள் 4 மாவட்டங்களில் திறக்க நடவடிக்கை
சென்னை:தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், 26 இடங்களில் புதிதாக மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த குவாரிகளில் இருந்து மணல் எடுத்து வந்து, யார்டுகளில் லாரிகளுக்கு வழங்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
முறைகேடு
இந்த ஒப்பந்ததாரர்களில் நான்கு பேர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய ஒப்பந்ததாரர்கள் வசம் இருந்த, 10 மணல் குவாரிகள் மூடப்பட்டன.
அதற்கு மாற்றாக, வேறு குவாரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், 13 மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத்துறை கடந்த ஆண்டு முயற்சித்தது. அதற்கான ஒப்பந்ததாரர்களை நியமிப்பதில், துறை மேலிடத்தின் அழுத்தம் காரணமாக பிரச்னை ஏற்பட்டது.
இதனால், அந்த முயற்சி பாதியில் முடங்கியதால், மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணல் விற்பனையை நம்பி செயல்பட்டு வந்த லாரிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக, தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன துணை செயலர் ஆர்.கோபாலகிருஷ்ணன் அளித்த மனுவுக்கு, நீர்வளத் துறை விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் அளித்துள்ள பதில்:
விழுப்புரம் கோட்டத்தில், கடலுார் மாவட்டம் சிதம்பரம் தாலுகா கிளியனுார் கிராமத்தில், மணல் குவாரி திறக்க தடையின்மை சான்று கிடைத்துள்ளது. இங்கு, மணல் விற்பனை கிடங்கு அமைக்க இடம் தேடி வருகிறோம்.
இதே மாவட்டத்தில், புவனகிரி தாலுகா பு.ஆதனுார், பண்ருட்டி தாலுகா வான்பாக்கம் ஆகிய இடங்களில் மணல் குவாரி திறக்க, சுற்றுச்சூழல் அனுமதிக்கான தடையின்மை சான்றுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம்.
இது தவிர, கடலுார் மாவட்டத்தில், 14; ராணிப்பேட்டை, 4; வேலுார், 3; விழுப்புரம் மாவட்டத்தில், 2 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விற்பனை
இதுகுறித்து, தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில் மணல் குவாரிகள் முறையாக இயங்காததால், அதற்கான லாரிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
இந்த லாரிகளை நம்பி இருக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. வீடு கட்டுவோரும் நியாயமான விலையில் மணல் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, கலப்பட மணல் விற்பனை அதிகரிக்கிறது.
தற்போது, விழுப்புரம் கோட்டத்தில், 26 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மணல் அள்ளும் பணிக்கான ஒப்பந்ததாரர்களை வெளிப்படையாக தேர்வு செய்ய வேண்டும்.
மணல் குவாரிகளை திறந்து, அரசு நிர்ணயித்த விலையில் வெளிப்படையாக மணல் வழங்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவை பூர்த்தியாவதுடன், அரசுக்கும் உரிய வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
-
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை
-
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அவலம்
-
'காலி'யாகும் நகராட்சி பழைய குப்பை கிடங்கு 'பயோமைனிங்' முறையில் கழிவுகள் அகற்றம்
-
அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு