தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அவலம்

உடுமலை: பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல், மக்களும், பல்வேறு இடங்களில் ரோட்டை கடக்கும் மக்களால் வாகன ஓட்டுநர்களும் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, எந்த துறையினரும் அக்கறை காட்டாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கணியூர், பழநி, தாராபுரம், திருப்பூர், செஞ்சேரிமலை ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற ஆறு நுழைவாயில்கள், பஸ் ஸ்டாண்டில் உள்ளன.

அனைத்து நுழைவாயில்களிலிருந்தும் வெளியேறும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். இவ்வாறு, நெடுஞ்சாலையை கடந்து செல்ல, மக்களுக்கு எவ்வித குறியீடுகளும் அமைக்கப்படவில்லை.

இதனால், மக்கள் செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ரோடு சந்திப்பில், ரவுண்டனா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியை கடந்ததும், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதியை கடக்கும் வரை அதிவேகமாக செல்கின்றன.

அப்போது, சென்டர்மீடியன் இடைவெளியில் ரோட்டை கடக்க முயலும் பயணியர் விபத்திற்குள்ளாகின்றனர். இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையை பல்வேறு இடங்களில் மக்கள் ரோட்டை கடப்பதால், ஏற்படும் விபத்துகளுக்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வரும் கனரக வாகனங்களும், பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரப்பகுதியின் வழியாகவே சென்று வருகின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் எப்போதும் இருக்கும்.

இந்நிலையில், இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்ட நடைமேம்பாலமும், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.

அந்த நடைமேம்பாலமும் பயன்படாமல் வீணாகி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அதிக நெரிசலை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையும் அக்கறை காட்டவில்லை. இதனால், இருபுறங்களிலும் வாகனங்கள் வரும் போது, குறுகலான ரோட்டில், வாகனங்கள் இடைவிடாமல், செல்கின்றன.

அப்போது, ரோட்டை கடக்க கால் மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. நகரின் முக்கிய பிரதான ரோட்டில், இந்த அவலம் நீடித்து வருகிறது.

நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் சந்திக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, எந்த அரசுத்துறையும் முன்வராதது வேதனையளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த முக்கிய பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement