'காலி'யாகும் நகராட்சி பழைய குப்பை கிடங்கு 'பயோமைனிங்' முறையில் கழிவுகள் அகற்றம்

உடுமலை: உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோடு பழைய குப்பைக்கிடங்கில், 'பயோமைனிங்' முறையில், கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பளவில் பழைய குப்பைக்கிடங்கு உள்ளது.

இங்கிருந்த குப்பை, கழிவுகள் அகற்றப்படாமல், பல அடி உயரத்திற்கு குப்பை தேங்கியுள்ளதோடு, துர்நாற்றம், சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சுற்றிலும் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து நகராட்சி மற்றும் பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும், குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு, அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டமாக அப்பகுதி மாறி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தீர்வு காண வேண்டும், என இப்பகுதி மக்கள், 25 ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

நகராட்சி சார்பில், இங்கு தேங்கியுள்ள, 19 ஆயிரம் டன் கழிவுகளை, 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்ற, நகராட்சி திட்டமிட்டு, அதற்கு ரூ. 2.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த, ஜன.,மாதம் முதல், தனியார் நிறுவனம் வாயிலாக இப்பணிகள் நடந்து வருகிறது.

இங்கு, 'பயோ மைனிங்' முறையில், கழிவுகள் நவீன இயந்திரங்கள் வாயிலாக எடுத்து, பெரிய அளவிலான கன்வேயரில் கொண்டு செல்லபட்டு, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பை அரைக்கப்பட்டு, பின்னர் இயற்கை முறையில் உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகள் மக்கிய இக்குப்பை தேவைப்படும் விவசாயிகள், பழைய குப்பை கிடங்கை அணுகலாம்.

மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பை, இங்கு முறையாக மறு சுழற்சி செய்யப்பட்டு வருகிறது. மறு சுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பையான, பிளாஸ்டிக், துணி உள்ளிட்டை தனியாக சேகரிக்கப்பட்டு, சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பாய்லர் எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement