பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: பள்ளி திறப்புக்கு, ஒரு வாரத்திற்கு முன்னரே, அனைத்து பாட புத்தகங்களையும், நோட்டுகளையும் பள்ளிகளுக்கு முழுமையாக வினியோகிக்க, தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கபட உள்ளது. அவ்வகையில், பள்ளிக்கல்வித்துறை வாயிலாக அச்சடித்த அனைத்து புத்தகங்களும், நோட்டுகளும் அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படும். இதேபோன்று, மாணவர்களுக்கு சீருடை, பேக் போன்றவையும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பட வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தமட்டில், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது.

சில நேரங்களில், பள்ளி திறந்தும், பாடபுத்தகங்கள் காலம் தாழ்த்திவழங்கப்படும். இதனால், மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படும். அதனால், முன்கூட்டியே திட்டமிட்டு, பள்ளிகளுக்கு பாடபுத்தகங்களை வினியோகிக்க தலைமையாசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்களை வழங்குவதற்காக வழிவகை செய்யப்படுகிறது. அதன்பேரில், அந்தந்த பள்ளிகளின் தேவை பட்டியலின்படி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சரிபார்த்து வினியோகிக்கப்படுகிறது.

இருப்பினும், சில நேரங்களில், சில பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சரிவர பள்ளியை வந்தடைவதில்லை. அதனால், பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களையும், நோட்டுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, திட்டமிட்டு, பாடபுத்தகங்களையும், நோட்டுகளை வினியோகிக்கவும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்ததும், மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு வழங்கி, கற்பித்தலை துவங்க வேண்டும்.

மாணவர்கள் இடைநிற்றல் இருந்தால், அவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.

Advertisement