அயனாவரத்தில் தாயின் தாலியை முகமூடி அணிந்து மகன் வழிப்பறி
அயனாவரம், 'ஆன்லனை்' செயலியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, தாயின் மீது 'ஸ்பிரே' அடித்து தங்க தாலி செயினை மகனே பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் பென்னி, 59. இவரது மனைவி எல்ஷி, 56. இவர்களது மகன் எபின், 26.
நேற்று முன்தினம், கணவர் வேலைக்கு சென்ற நிலையில், எல்ஷி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, 'காலிங் பெல்' அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். வெளியில் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர், கண்ணிமைக்கும் நேரத்தில், எல்ஷி முகத்தில் 'ஸ்பிரே' அடித்துள்ளார்.
அவர், முகத்தை கைகளால் மூடுவதற்கு முன், எல்ஷி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் செயினை பறித்து, அந்த மர்ம நபர் தப்பி ஓடினார்.
இதுகுறித்து எல்ஷி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக புகார் அளித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு அயனாவரம் போலீசார் விரைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மர்ம நபர் தப்பியோடிய தெருவை எல்ஷி சுட்டிக்காட்டினார்.
போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளை, மொபைல் போனில் சேகரித்த போலீசார், எல்ஷியிடம் அதை காட்டினர். அப்போது, பென்னி மற்றும் எபின் ஆகியோரும் வீட்டில் இருந்தனர். வீடியோ தெளிவாக இல்லாததால், எல்ஷியால் மர்ம நபர் குறித்து தெளிவாக கூறமுடியவில்லை.
இதையடுத்து இரவில், மீண்டும் ஒருமுறை எல்ஷி வீட்டிற்கு சென்ற போலீசார், தெளிவான கேமரா காட்சி பதிவை காண்பித்தனர். அப்போது, மகன் எபின் சாயலில் இருப்பதாக, எல்ஷி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எபினை தனியாக வைத்து போலீசார் விசாரித்தபோது, தாயின் தாலி செயினை பறித்துச் சென்றதாக, அவர் ஒப்புக்கொண்டார்.
எபின், 'டிரேடிங்' வியாபாரத்தில் பணத்தை இழந்து, அதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் இருந்துள்ளார். பணத் தேவைக்காக தாயின் செயினை பறித்தது தெரியவந்தது. பெற்றோர் புகாரை வாபஸ் பெற்றதால், எபினிடம் எழுதி வாங்கி எச்சரித்து சென்றனர்.