பாதியில் நிற்கும் மழைநீர் வரத்து ஓடை, ரோடு பணிகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மழை நீர்வரத்து ஓடை கட்டும் பணி பாதியில் நிற்பதாலும், தெருக்களில் ரோடுகள், வாறுகால்கள் இல்லாததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி 17 வது வார்டை சேர்ந்தது நாகலிங்க நகர். இதில் குறிஞ்சி நகர், முல்லை நகர் எஸ்.ஆர்., தெரு உள்ளிட்ட 10 தெருக்களுக்கு மேல் உள்ளது. நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் போதுமானஅடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். நாகலிங்க நகர் 1 வது தெருவில் இருந்து குறிஞ்சி நகர் சந்திப்பு பகுதி வரை ரோடு இல்லை. கரடு முரடாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்த பகுதியில் தெரு விளக்கும் இல்லை. இருட்டில் வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். இந்தப் பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு குழி தோண்டி அதில் கழிவு நீரை சேகரித்து, நிறைந்தவுடன் அதை ஒரு வாளியில் எடுத்து அருகில் உள்ள வாறுகாலில் ஊற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். வாறுகால்கள் அமைக்கப்பட்ட தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளை கடிப்பதால் பலவித நோய்கள் வருகின்றன.

இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தெருக்களை தோண்டி பாதி மூடியும், மூடாமலும் விட்டதால், கழிவுநீர் தேங்கி குழிகளில் தேங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. நாகலிங்க நகரில் பொது கழிப்பறை இல்லை. நகராட்சி மூலம் நவீன சுகாதார வளாகம் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நாகலிங்க நகரில் நகராட்சி மூலம் 30 லட்சம் நிதியில் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு 7 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இறுதிக்கட்ட பணியும் அரைகுறையாக நிற்கிறது. தற்போது சுகாதார நிலையம் கால்நடைகள் தங்குமிடமாக உள்ளது.

வாறுகால் அவசியம்



தனம், குடும்பதலைவி: நாகலிங்க நகர் 1வது தெருவில் வாறுகால்கள் இல்லை. வீடுகளில் தேங்கும் கழிவு நீரை ஒரு குடி தோண்டி அதில் விடுகின்றோம். குடி நிறைந்த உடன் கழிவு நீரை ஒரு வாளியின் மூலம் சேகரித்து அருகில் உள்ள வாறுகாலில் கொட்டுகிறோம். வாறுகால் கட்ட பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

பள்ளமான ரோடு



கணேசன், வெல்டர்: நாகலிங்க நகர் -குறிஞ்சி நகர் இணையும் பகுதியில் ரோடு இல்லாமல் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேடும், பள்ளமுமாக இருப்பதால் இரவு நேரங்களில் நடக்க முடிவதில்லை. வயதானவர்கள் தெரு விளக்கு இல்லாததால் இருளில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இங்கு ரோடு அமைக்க வேண்டும்.

போதுமான வசதிகள் இல்லை



அங்குலட்சுமி, குடும்பதலைவி: நாகலிங்க நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. பல தெருக்களில் வாறுகால் இன்றி கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. கட்டப்பட்டுள்ள வாறுகாலிலும் கழிவுநீர் சீராக வெளியேறாமல் உள்ளது. தெருக்களில் ரோடு இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். அத்தியாவசியமான வசதிகளை நகராட்சி செய்து தர வேண்டும்.

Advertisement