தற்காலிக துாய்மைப்பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., செலுத்தாத கொடுமை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ தொகையை செலுத்தாததால் விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சிவகாசி மாநகராட்சியில் 2022 ஏப்., முதல் துாய்மை பணிகள் அனைத்தும் தனியார் ஒப்பந்த நிறுவனமான மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.8.5 கோடி மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் துாய்மைப் பணிக்கு 270 பணியாளர்களை நியமித்து, தினசரி 54 டன் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பது விதி.

ஆனால் ஒப்பந்த நிறுவனம் 270 பேருக்கு 170 பணியாளர்களை கொண்டு துாய்மை பணிகளை செய்தது, பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் தொகை செலுத்தாதது, குப்பையை தரம் பிரிக்காதது, மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் இருப்பது உறுதியானதை அடுத்து அப்போதைய நகர் நல அலுவலர் சரோஜா ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி மாநகராட்சி துாய்மை பணிக்கு 10 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் வாகனத்தில் சென்றனர். கோட்டைபட்டி அருகே சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த தூய்மை பணியாளர்கள் பேச்சி, கோட்டையம்மாள், பேச்சியம்மாள் டிரைவர் கண்ணன் ஆகியோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துாய்மை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ பதிவு செய்யப்படாததால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் 4 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று சிரமப்பட்டனர்.

தற்காலிக துாய்மை பணியாளர்களின், ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ தொகையை செலுத்தாமல் அதிருப்தி அடைந்ததால் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கமிஷனர் சரவணன் கூறுகையில், தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., செலுத்தாதது குறித்து விசாரிக்கப்படும். மேலும் ஒப்பந்த நிறுவனத்திடம் இத்தொகையை செலுத்துவதற்கு வலியுறுத்தப்படும். துாய்மை பணியில் எந்தவித முறைகேடும் இல்லாமல் பணியை முழுமையாக மேற்கொண்டால் மட்டுமே பணம் வழங்கப்படும், என்றார்.

Advertisement