எம்.டி.சி., ரூ.2,000 பாஸ் திட்டம் இதுவரை 300 மட்டுமே விற்பனை

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 50 'ஏசி' பேருந்துகள் உட்பட, 3,056 பேருந்துகள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன.

'ஏசி' பேருந்துகள் தவிர்த்து, மற்ற பேருந்துகளில் பயணிக்கும் வகையில், 320 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில், பாஸ்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே, 'ஏசி' மாநகர பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில், 2,000 ரூபாய் புதிய மாதாந்திர பாஸ், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், இதுவரையில், 300 பாஸ் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

கட்டணம் குறையுமா?



இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

கோடை வெயிலில், மக்கள் மாநகர 'ஏசி' பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றனர். போதிய 'ஏசி' பேருந்துகளே இல்லை.

மேலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் மாதாந்திர புதிய பஸ் பாஸ், கட்டணம் அதிகமாக இருக்கிறது.

இந்த கட்டணத்தை கணிசமாக குறைத்தால், பயணியர் அதிகளவில் வாங்கி பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது 50 'ஏசி' பேருந்துகள் மட்டுமே உள்ளன. இதில் செல்லும் பயணியரும் குறைவாக தான் இருக்கின்றனர்.

அடுத்த மாதத்துக்குள், 200 புதிய 'ஏசி' பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது, 2,000 ரூபாய் பாஸ் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement