காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்

உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண திருவிழா நாளை துவங்குகிறது.

உடுமலை நேரு வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழா நேற்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று மாலை, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து நாளை, (10ம் தேதி) முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை அதிகாலையில் கணபதி ேஹாமம் மற்றும் கோ பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணி அளவில் கொடியேற்றப்படுகிறது.

பின் பக்தர்கள் முளைப்பாரி எடுக்கின்றனர். மாலையில், கும்பஸ்தாபிதம் செய்யப்படுகிறது. வரும் 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், புதிதாக வேண்டுதல் வைத்தும், சுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தும் வகையிலும், மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்.

மே 12ம்தேதி காலை, 6:30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து 10:30 மணிக்கு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலையில் வான வேடிக்கையுடன் திருமண கோலத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

Advertisement