கழிப்பறை செல்ல முடியாமல் தவித்தவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை, 'தேசிய நெடுஞ்சாலையில் கழிப்பறை செல்ல முடியாமல் தவித்தவருக்கு, 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், இஸ்மாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

கடந்த 2024ல், சூரப்பட்டு சுங்கச்சாவடி வழியாக காரில் வந்தேன். அப்போது, கழிப்பறை செல்வதற்காக சுங்கச்சாவடி ஊழியரிடம் கேட்டபோது, சற்று தொலைவில் இருப்பதாக கூறினார். ஆனால், ஒரு கி.மீ., துாரத்திற்கு அப்பால் கழிப்பறை இருந்தது.

அதே நேரம், கழிப்பறையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில், பூட்டப்பட்டு இருந்தது. இதனால், கழிப்பறை செல்ல முடியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், 2021ல் வெளியிட்ட வழிகாட்டுதலில், 'நீண்ட துார பயணத்தில் ஏற்படும் சோர்வை குறைத்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கு, சுங்கச்சாவடிகளில் கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளது.

ஆனால், சூரப்பட்டு சுங்கச்சாவடியில், ஒரு கி.மீ., துாரத்திற்கு அப்பால் கழிப்பறை இருப்பது மட்டுமல்லாமல், பூட்டி வைத்திருப்பது சேவை குறைபாடு. எனவே, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

சூரப்பட்டு சுங்கச்சாவடியை பொறுத்தவரை, சற்று தொலைவில் கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும், மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்கிறோம்.

ஆனால், கழிப்பறை பூட்டப்பட்டு இருப்பதன் வாயிலாகவும், அதற்கான சாவியை மனுதாரருக்கு வழங்காததன் வாயிலாகவும், வாகன ஓட்டிகள், பயணியருக்கான சேவை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை குறைபாட்டிற்காக, சூரப்பட்டு சுங்கச்சாவடியை நிர்வகித்து வரும் நிறுவனம், மனுதாரருக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய்; வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாய் என, 12,000 ரூபாய் வழங்க வேண்டும்.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருப்பதையும், அவை எப்போதும் பயன்பாட்டில் இருப்பதையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement