பள்ளி வாகனங்களில் குறைகள் இருந்தால் தகுதிச்சான்று ரத்து கலெக்டர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டால் தகுதிச்சான்று ரத்து செய்யப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை செய்துள்ளார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பள்ளி வாகனங்களின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் செயல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் 69 தனியார் பள்ளிகளில் 549 பள்ளி பஸ், வேன்களை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வில் வாகனத்தின் உறுதி, டயர்கள், உட்புற தரைதளம், இருக்கைகள், அவசரகால கதவு, படிக்கட்டுகள், பிரேக் திறன், அவசர கால பயன்பாட்டிற்கான தீயனைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டியில் மருந்துகள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா நல்ல நிலையில் இயங்குகிறதா என்று சோதிக்கப்பட உள்ளது.

குறைபாடுள்ள பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு சீர்செய்த பின்பு தான் இயக்க அனுமதி வழங்கப்படும். விபத்தில்லாத கல்வி ஆண்டாக அமைந்திட டிரைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது வாகனத்தில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட தீயனைப்பு அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் டிரைவர்களுக்கு பயிற்சி அளித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராநமாதபுரம் செந்தில்குமார், பரமக்குடி பத்மபிரியா பங்கேற்றனர்.

Advertisement