அமித் ஷா மிரட்டல் தான் காரணமா? தி.மு.க.,வுக்கு தமிழிசை பதிலடி

'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி உருவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிரட்டல் தான் காரணம்' என, தி.மு.க., நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில் நேற்று, 'ஆமாம் மிரட்டல் தான்' என்ற தலைப்பில், ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

அதில், 'பலவிதங்களில் மிரட்டித்தான் அ.தி.மு.க.,வை பா.ஜ., பணிய வைத்திருக்கிறது என, முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு, மகிழ்ச்சியாகத்தான் கூட்டணி வைத்துள்ளதாக சொல்கிறார் பழனிசாமி. கூட்டணிக்கும், மகிழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்; இது என்ன கல்யாண சம்பந்தமா? தன்னைக் காக்க பழனிசாமியும், தன் கட்சியை காக்க அமித் ஷாவும் அமைத்துள்ள சுயநல ஊழல் கூட்டணி தான் அது' என்று கூறப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்து, தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சுட்டுக்கொன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியுடன், தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டது தான் கொள்கை கூட்டணியா?

இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த போது, வெறும் உண்ணாவிரத நாடகத்தை, தி.மு.க., நடத்தியது.

தி.மு.க., ஆட்சியை ஊழலுக்கு ஒருமுறையும், தேச விரோதத்துக்கு துணை போனதற்காக இரண்டாவது முறையும், காங்கிரஸ் ஆட்சியும், சந்திரசேகர் தலைமையிலான ஆட்சியும், 'டிஸ்மிஸ்' செய்துள்ளது.

தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்த காங்கிரசுடன், எமர்ஜென்சி நெருக்கடியை மறந்து கூட்டணி சேர்ந்து கொண்டு, நான்கு ஆண்டு விளம்பரம் போதும் என நினைப்பது, மக்களை ஏமாற்றுவதற்கு சமம்.

தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளின் குடும்பங்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், மனசாட்சி இன்றி எங்களை பார்த்து, சந்தர்ப்பவாத கூட்டணி என்பது பெரிய நகைச்சுவை.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement