காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலத்த காயம்

மூணாறு: மூணாறு அருகே தோட்ட நிர்வாகத்தினரின் வற்புறுத்தலால் வழக்கத்தை விட முன்னதாக பணிக்குச் சென்ற பெண் தொழிலாளி காட்டு யானை தாக்கி பலத்த காயம் அடைந்தார்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கல்லார் எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி ஷைனி 48. இவர் நேற்று காலை 6:00 மணிக்கு பணிக்குச் சென்றார். அப்போது தேயிலை பாக்டரி அருகே விரிந்த கொம்பன் காட்டு யானையிடம் எதிர்பாராத வகையில் சிக்கினார். அதனிடம் இருந்து தப்ப முயன்ற ஷைனியை யானை துதிக்கையால் தள்ளி விட்டு சென்றது. பலத்த காயம் அடைந்தவரை மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வற்புறுத்தல்: தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நேரம் காலை 8:00 முதல் 12:00 மணி, மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரையாகும். பச்சை தேயிலை சீசன் நேரங்களில், வழக்கத்தை விட முன்னதாக பணிக்குச் செல்ல தோட்ட நிர்வாகத்தினர் வற்புறுத்துவது வழக்கம். அதன்படி தற்போது பச்சை தேயிலை சீசன் என்பதால் வழக்கத்தை விட முன்னதாக பணிக்குச் சென்ற ஷைனி காட்டு யானையிடம் சிக்கினார்.

மூணாறுக்கு ஏப்.30ல் வந்த தேசிய மகளிர் ஆணையம் தலைவர் விஜயா ரஹாட்கரிடம், தொழிலாளர்களை வழக்கத்தை விட முன்னதாக பணிக்குச் செல்ல தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவது இல்லை எனவும் சூப்பர்வைசர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தொழிலாளர்கள் முன்னதாக பணிக்கு செல்வதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறினர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement