திரையிலும் நேரிலும் பார்ப்பதும் ஒன்று என நினைப்பவர்களை மாற்ற வேண்டும் எம்.பி., கனிமொழி பேச்சு

கம்பம்: 'திரையில் பார்ப்பதும், நேரில் பார்ப்பதும் ஒன்று என்று நினைக்கும் சிலரையும் நாம் மற்ற வேண்டும்,' என தேனி மாவட்டம், கம்பத்தில் மாவட்ட மகளிரணி கூட்டத்தில் எம்.பி., கனிமொழி பேசினார்.

அவர் பேசியதாவது :

பல மாநிலங்களில் ஆயிரம் ஆண்கள் என்றால் 800 முதல் 900 பெண்கள் உள்ளனர். தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 994 பெண்கள் உள்ளனர். காரணம் பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்கும் மாநிலம். 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருண்ட காலமாக இருந்தது. இப்போது நமது உரிமைகளை மீட்டெடுக்கும் ஆட்சி. சட்டசபையில் எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு கவர்னர் வெளிநடப்பு செய்கிறார். பொதுமக்களுக்கு சிறு,சிறு உதவிகளை செய்யுங்கள்.

தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பார்கள். இங்கு பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள் தானே உள்ளீர்கள். 42 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மகளிரணியினர் அரசின் சாதனைகளை கூற வேண்டும். திரையில் பார்ப்பதும், நேரில் பார்ப்பதும் ஒன்று என சிலர் நினைக்கின்றனர். அவர்களையும் மாற்ற வேண்டும். அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றார். தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ. மகாராஜன், முன்னாள் எம்.பி. செல்வேந்திரன், தீர்மான குழு இணை செயலர் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement