பிளஸ் 2 தேர்ச்சியில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது திருப்பூர்

திருப்பூர் : பிளஸ் 2 தேர்வில் கடந்தாண்டு முதலிடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு, 0.08 சதவீத தேர்ச்சி கூடுதலாக பெற்றும், மூன்றாமிடம் பெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 735 மாணவர், 13 ஆயிரத்து, 862 மாணவியர் என, மொத்தம், 25 ஆயிரத்து, 597 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 11 ஆயிரத்து, 350 மாணவர், 13 ஆயிரத்து, 614 மாணவியர் என, 24 ஆயிரத்து, 964 பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, 23 ஆயிரத்து, 849 பேர் தேர்வெழுதினர். தேர்ச்சி 97.45 சதவீதம். நடப்பாண்டு, கூடுதலாக, 1,748 பேர் சேர்த்து, 25 ஆயிரத்து 597 பேர் தேர்வெழுதினர். தேர்ச்சி சதவீதம் முந்தைய ஆண்டை விட, 0.08 சதவீதம் (97.53) அதிகரித்தும், மூன்றாவது இடத்தையே திருப்பூர் மாவட்டம் பெற முடிந்தது.

திருப்பூரை விட, 1.29 சதவீதம் கூடுதலாக பெற்றதால், 98.82 சதவீதத்துடன், அரியலுார் முதலிடம் பெற்றது. 97.98 சதவீதத்துடன் ஈரோடு, 2து இடம் பெற்றுள்ளது. திருப்பூரை விட, 0.5 சதவீதம் குறைவாக பெற்றதால், கோவை நான்காமிடம் பெற்றது. அதே நேரம், முதல் இரண்டு இடங்களை பெற்ற அரியலுார் (8,533), ஈரோடு (22 ஆயிரத்து 279) மாவட்டத்தை விட அதிக மாணவர்கள் (25 ஆயிரத்து 597) திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.

Advertisement