பிராட்வே பஸ் நிலையத்தில் அகற்றிய கடைகளுக்கு மாற்று ஏற்பாடு தயார்

பிராட்வே,
பிராட்வே பேருந்து நிலையம், 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, கிண்டி, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், முறையான பராமரிப்பில்லாததால், மோசமான நிலையில் காட்சியளித்தது.

கவனிப்பாரின்றி காட்சியளிக்கும் பிராட்வே பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து, அதிநவீன வசதிகளுடன், 822 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்து பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், ராயபுரம் மேம்பாலம் அருகில் உள்ள 3 ஏக்கர் பரப்பளவுள்ள துறைமுகத்திற்கு சொந்தமான காலி இடத்தில், 7 கோடி ரூபாய் செலவில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதனால், பேருந்து நிலையத்தை சுற்றி செயல்பட்டு வந்த 288 கடைகளை, இம்மாத இறுதிக்குள் காலி செய்ய வேண்டும்என, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த கடைகளுக்கு மாற்றாக, என்.எஸ்.சி.போஸ் சாலையில் 179 கடைகளும், பிராட்வே, ரத்தன் பஜாரில் 31 கடைகளும், ஈவ்னிங் பஜாரில் 22 கடைகளும், பிரகாசம் சாலை, ஸ்ரீராமலு பார்க்கில் 56 கடைகளும் கட்டப்பட்டு வருகின்றன.

தற்போது, கடைகளுக்கான கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 15ம் தேதிக்குள் உரிமையாளர்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement