மானாமதுரை, இளையான்குடியில் மின் ஊழியர் பற்றாக்குறையால் பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை,இளையான்குடி சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாகவும், மின்தடை ஏற்படுவது குறித்து கிராம மக்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் அதனை சரி செய்வதற்கு நீண்ட நேரம் ஆவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில கிராமங்களில் நீண்ட நேரம் மின்தடை நீடிப்பதால் அலைபேசிகளை கூட சார்ஜ் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மின்தடையால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் வண்டிகளில் வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக புலம்பி வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது கோடைகாலம் என்பதால் மின் தேவை அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதனை சரிசெய்ய போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் மின்தடையை சரி செய்வதற்கு தாமதமாகி வருகிறது என்றனர்.

Advertisement