ரோடுகள் புதுப்பிக்க நிதி வந்தாச்சு; முதற்கட்டமாக ரூ.2.6 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் ரோடுகளை சீரமைக்க, 2.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் ரோடு பிரதான சாலையாக உள்ளது. இவ்வழியாக தினமும், ஆனைமலை, கோட்டூர் மற்றும் கேரளாவுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே ரோடுகள் பெயர்ந்தும் கிடக்கின்றன. இவற்றை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜாமில் ரோடு மற்றும் சுற்றுப்பகுதி ரோட்டை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் ரோடு, சத்திரம் வீதி, பொட்டுமேடு, கடைவீதி மற்றும் நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில், ரோடுகள் சீரமைக்க அரசிடம், 4.13 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது.

அதில், முதற்கட்டமாக, ராஜாமில் ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 2.138 கி.மீ.,க்கு 99 லட்சம் ரூபாய்க்கும், மணிமேகலை வீதி, டாக்டர் அம்பேத்கர் முதல்வீதி, நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில், 7.239 கி.மீ., நீளம் உள்ள ரோடுகள் சீரமைக்க, 1.61 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மொத்தம், ரோடு பணிகளுக்காக, 2.6 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீதம் உள்ள ரோடுகள் சீரமைக்க அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement