மதுக்கடைகளால் குறையாத தொல்லை; கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
உடுமலை; 'நகரில், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக இருக்க காரணமான, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும்,' என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடுமலை பசுபதி வீதியில், நகர கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உட்பட அரசு அலுவலகங்களும், வணிக கடைகளும் அதிகளவு உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி ரோட்டிலிருந்து பிரியும் இந்த வீதியில், காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் மிகுந்து இருக்கும். இந்நிலையில், நகர கூட்டுறவு வங்கி எதிரில், 'டாஸ்மாக்' மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையால், ஏற்கனவே, நெரிசலில் சிக்கித்தவிக்கும் வீதியில், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக, கடைக்கு வரும் 'குடி'மகன்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதுடன், இரவு நேரங்களில், அரசு அலுவலகங்கள் முன் தஞ்சமடைகின்றனர்.
இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. கூட்டுறவு வங்கிக்கு வரும் மக்கள், எதிரேயுள்ள மதுக்கடையால், அச்சத்திற்குள்ளாகின்றனர்.
இதே போல், பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை, அரசுப்பள்ளி, நகராட்சி பூங்கா அமைந்துள்ளன. இந்த ரோட்டில், பூங்கா அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
அங்கு, 'குடி'மகன்கள் ரோட்டிலேயே நின்று மது அருந்துகின்றனர். சிலர், மதுபாட்டில்களோடு, அண்ணா பூங்கா முன்பும், நகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியும் அமர்ந்து கொள்கின்றனர்.
சில நேரங்களில் போதை நபர்கள், ரோட்டிலேயே படுத்துக்கொள்கின்றனர். இதனால், அவ்வழியாக பெண்கள் செல்ல முடிவதில்லை.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து செல்பவர்களும், வேறு வழியாக, சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இவ்வாறு, போக்குவரத்துக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலாக இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை