காமராஜர் காய்கறி மார்க்கெட்டிற்கு சோலார் பேனல் பொருத்த முடிவு

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி., சாலையில் இயங்கி வந்த காமராஜர் காய்கறி மார்க்கெட் பழுதடைந்ததால் கடந்தாண்டு, மார்க்கெட் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.02 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக காய்கறி மார்க்கெட், 85 கடைகளுடன் உருவாக்கப்பட்டது.

இதை, கடந்த மாதம், 30ம் தேதி அமைச்சர்கள் நேரு, நாசர் மற்றும் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது காய்கறி மார்க்கெட் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், திருத்தணியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்வதற்கு சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, காய்கறி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி நிர்வாகம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் பேனல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இம்மாதத்திற்குள் காய்கறி மார்க்கெட்டிற்கு சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதன் வாயிலாக கடைகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement