கிடப்பில் ரயில்வே சுரங்கப்பாதை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய கிராசிங்கில், ரயில் வரும் நேரங்களில், ரயில்வே கேட் மூடப்படுவதால், இருபுறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், பொன்னேரிக்கரையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் 2022 ல், திறக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே கிராசிங் மூடப்பட்டு, மினி சுரங்கப்பாதை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.

மூன்று மாதங்களில் பணி நிறைவு பெறும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்த நிலையில், மினி சுரங்கப்பாதைக்கான ரெடிமேட் கான்கிரீட் பாக்ஸ் தயார் செய்யப்பட்டதோடு,அப்பணி மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இதனால், ரயில்வே கிராசிங் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் வசிக்கும், 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 2 கி.மீ., துாரம் மேம்பாலத்தை சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து கனகதுர்கை அம்மன் நகர் மற்றும்அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்க தலைவர் கதிர்வேலு கூறியதாவது:

மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், பள்ளி செல்லும் மாணவ--மாணவியர், முதியோர் மேம்பாலம் வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

இதனால், பலர் தங்கள் வீடு மற்றும் மனையை விற்க முயற்சி செய்கின்றனர். அடிப்படை வசதி, சமூக விரோதிகள் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தனித்து விடப்பட்ட பகுதியாக இந்திரா நகர் மாறிவிட்டது. எனவே, மினி சுரங்கப் பாதை பணியை ரயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்கவேண்டும்

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement