சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு பணி முழு கொள்ளளவு தண்ணீர் சேமிக்க திட்டம்

சோழவரம்,:சென்னையின் குடிநீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் வாய்ந்த சோழவரம் ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை, நீரியல் வல்லுனர்களின் பரிந்துரையின்படி, 40 கோடி ரூபாயில், 1.04 கி.மீ., தொலைவிற்கு, கரைகள் சீரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால், இந்த ஆண்டு, முழு கொள்ளளவான, 1.08 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்க நீர்வளத் துறை திட்டமிட்டு உள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மழைக்காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், பூண்டி நீர்தேக்கத்தில் இருந்தும் மழைநீர் கொண்டு வரப்பட்டு இங்கு தேக்கி வைக்கப்படுகிறது.
கடந்த 2015ல் ஏற்பட்ட கனமழையின் காரணமாக ஏரியின் கரைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து விரிசல்கள் ஏற்பட்டன. ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. அப்போது மணல் மூட்டைகளை போட்டு தற்காலிக சீரமைப்பு பணிகள் அங்கு மேற்கொண்டு, பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன.
அதேபோன்று, கடந்த ஆண்டு, 2023ல் வடகிழக்கு பருவமழையின்போதும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகளவிலான உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், சோழவரம் ஏரி வேகமாக நிரம்பி, அதன் முழு கொள்ளளவான, 1.08 டி.எம்.சி.,யை விரைவாக எட்டியது.
இதனால் மீண்டும் கரைகள் ஆங்காங்கே சேதம் அடைந்தன.கரைகளின் ஓரங்களில் போடப்பட்டிருந்த தடுப்பு சுவர்களும் உடைந்து சிதைந்தன.
நீர்வளத் துறையினர் மணல் மூட்டைகளை போட்டும், செம்மண் கொட்டியும் தற்காலிக தீர்வை ஏற்படுத்தினர். இதனால், சோழவரம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அச்சம் நிலவியது.
கரைகள் அடிக்கடி சேதம் அடைந்தும், மண் சரிவும் ஏற்படுவதை தொடர்ந்து, மத்திய, மாநில நீர்வளத்துறை அதிகாரிகள், நீரியல் வல்லுனர்கள் சோழவரம் நீர்தேக்கப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர்.
கரைகளை பலப்படுத்துவது, கரையோரங்களில் உள்ள மரங்களால் கரைகளுக்கு பாதிப்பு இருப்பதால் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.
அதிகாரிகளின் பரிந்துரைகளை ஏற்று, கடந்த ஆண்டு, மார்ச் மாதம், சோழவரம் ஏரி சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு, 40கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
சோழவரம் ஏரிக்கரையானது, மொத்தம், 3.5 கி.மீ., நீளம் கொண்டது. அதில் அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, 1.04 கி.மீ., தொலைவிற்கு கரை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.
கரைகளின் மேல்பகுதியில், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவரும், கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில், நவீன தொழில்நுட்பமான 'டி - வால்' எனப்படும் நீர்கசிவு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டன.
இரண்டு தடுப்பு சுவர்களுக்கு மத்தியில், 30 நீளத்திற்கு, சரிவாக பாறை கற்கள் பதிக்கப்பட்டன. இதன் வாயிலாக ஏரியில் தேங்கும் தண்ணீர் சிறிளவும் வெளியேறாது. கரைகளில் மண் அரிப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும்.
தற்போது கரையின் உள்பகுதியில் உள்ள சரிவுகளில் பாறைகற்கள் பதிக்கும் பணிகளில் பெரும்பாலனவை முடிந்து உள்ளன.
கரையின் மேல்பகுதியில், 5 மீட்டர் அகலத்தில் செம்மண் கொட்டி பலப்படுத்தப்படுகிறது. அதன் இருபுறமும், ஒரு மீ. உயரத்தில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்படுகிறது. அதில் ஒருபுறம் அலைதடுப்பு சுவராக அமைகிறது.
மழைக்காலங்களில் சோழவரம் ஏரியும், புழல் ஏரியும் ஓரே நேரத்தில் நிரம்பும் நிலை இருக்கிறது. இதனால் சோழவரம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியபின், உபரிநீரை புழல் ஏரிக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் இருந்தது.
சோழவரம் ஏரியின் பாதுகாப்பை கருதி, உபரிநீரை கொசஸ்தலை ஆற்றிற்கு உடனடியாக வெளியேற்றுவதற்காக, கலங்கல் பகுதியில் புதியதாக இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டும், ஏரிக்கரை சீரமைப்பு பணிகளுக்காக, அங்கு தேங்கிய தண்ணீர் மேற்கண்ட ஷட்டர்கள் வழியாக உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு, குறைந்த அளவிலேயே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஏரியில், 0.14 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.
தற்போது கரை சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாதங்களில் முழுமையாக முடிக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது, முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, கரை சீரமைப்பு பணிகளுக்காக குறைந்த அளவில் தண்ணீர் வைக்கப்பட்டது. தற்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து உள்ளன.
இந்த ஆண்டு பருவமழைக்கு, முழு கொள்ளளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் பணிகள் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டினால், கரைகள் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
-
திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை
-
சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
-
மானிய விலையில் சோளம் விதை
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி