மாநிலம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு துவங்கியது
திருப்பூர்:தமிழகம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு துவங்குகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் வாரியாக நீர் பாசன வசதியை கண்டறிந்து, புதிய வேளாண் திட்டங்களை உருவாக்க ஏதுவாக, மத்திய அரசு, சிறு பாசன கணக்கெடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.மத்திய ஜல் சக்தி அமைச்சகம், நாடு முழுவதும் ஏழாவது சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. 2023 - 24 பசலி ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், புள்ளியியல் துறை வாயிலாக, கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட அளவில் புள்ளியியல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, களப்பணியில் ஈடுபட உள்ள வி.ஏ.ஓ.,க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், களப்பணியாளர்கள், விவசாயிகளை அணுகி, பாசன நீராதாரம் குறித்த விவரங்களை பெற்று, ஆன்லைனில் பதிவு செய்ய உள்ளனர். கடந்த 2023 - 24ம் ஆண்டில், 2 ஆயிரம் எக்டருக்கு உட்பட்ட பாசனத்துக்காக, புதிதாக தோண்டப்பட்ட கிணறு, ஆழ்துளை கிணறு. அந்த நீராதாரம் மூலம் பாசனம் பெறும் நிலப்பரப்பு; அரசு திட்டத்தில் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பின் அவ்விவரங்கள்; குளம், குட்டை, ஏரி உள்பட நீர் நிலைகளின் தற்போதைய நிலை பதிவு செய்யப்படும்.
ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து கிணறு, ஆழ்துளை கிணறுகள் தற்போது பயன்பாடின்றி கைவிடப்பட்டிருப்பின், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, கழிவுநீர் கலப்பு, மின் இணைப்பு இல்லாதது அல்லது வேறு எந்த காரணத்தால் கைவிடப்பட்டது என்கிற தகவல்களும் சேகரிக்கப்படும். பாசனம் தொடர்பாக விசாயிகளிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்களையும் ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, பிரத்யேக மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.
சிறுபாசன கணக்கெடுப்புக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. வரும், 20ம் தேதி சோதனை ஓட்டம் முடிவடைந்து, கணக்கெடுப்பு துவங்கப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு