சிங்கபெருமாள் கோவிலில் தொடரும் நெரிசல் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள் கோவிலில் நெடுஞ்சாலை ஓரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவிலில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, இங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும், சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வங்கி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இங்கு, ஜி.எஸ்.டி., சாலை, அனுமந்தபுரம் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி., சாலையில் மெல்ரோசாபுரம் சந்திப்பு முதல் பகத்சிங் நகர் சந்திப்பு மற்றும் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் இருபுறமும் கார், ஆட்டோ, தனியார் தொழிற்சாலை பேருந்துகள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

குறிப்பாக காலை, மதியம், மாலை நேரங்களில் இந்த சாலையில் செல்லும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள், 1 கி.மீ., துாரத்திற்கு உள்ளாகவே, பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்களை இறக்கி விடுவது, ஏற்றிச் செல்வது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நெடுஞ்சாலயில் அமைந்துள்ள திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு முறையாக 'பார்க்கிங்' வசதி இல்லாததால், இங்கு வருவோர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.

ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில், அரசியல் கட்சியினர் சாலையை ஆக்கிரமித்து தண்ணீர் பந்தல் அமைத்து உள்ளது, கூடுதல் நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் முதல்வர், கவர்னர் உள்ளிட்டோர் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போது, போக்குவரத்து போலீசார் நாள் முழுதும் முக்கிய சந்திப்புகளில் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தனியார் தொழிற்சாலை பேருந்துகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் நின்று செல்ல, தனியாக நிறுத்தங்கள் உருவாக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, கடந்த ஆண்டு வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். இருப்பினும் சில நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தன. நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளன.

- ப.பிரகாஷ்,

சிங்கபெருமாள் கோவில்.

சர்வீஸ் சாலை இல்லாததால் விபத்து

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஜி.எஸ்.டி., சாலை மூன்று ஆண்டுகளுக்கு முன், விரிவாக்க பணிகள் நடைபெற்றன. அப்போது 2 கி.மீ., துாரம் சர்வீஸ் சாலை தனியாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Advertisement