போலி மொபைல் செயலிகளில் முதலீடு செய்து புதுச்சேரியில் 1,000க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்

புதுச்சேரி: ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்ற போலி மொபைல் செயலியில் பணத்தை செலுத்தி ஏமற்ற வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப், பேஸ் புக் உள்ளிட்ட ஆன்லைன் மூலமாக அதிக லாபத்தை கொடுக்கிறோம் என்று பொது மக்களை ஏமாற்றுவது நாடு முழுதும் அதிகரித்து வருகிறது.

அதுபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாந்துள்ளனர்.

ஆன்லைனில் வந்த சைபர் மோசடி கும்பல் உருவாக்கிய லிங்க் மூலம் மொபைல் செயலிகளில் 3,500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், 30 நாட்களுக்கு தினசரி 112 ரூபாய் தருகிறோம். 23 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 60 நாட்களுக்கு தினசரி 805 ரூபாய் கொடுக்கிறோம். 28 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 30வது நாளில் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி, பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

பணம் செலுத்திய ஒரு சிலருக்கு மட்டும் 60 நாட்களுக்கு மோசடி கும்பல் சொன்னபடி பணத்தை கொடுத்ததுடன், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளனர்.

இவ்வாறு, மோசடி கும்பல் உருவாக்கிய போலி மொபைல் செயலியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு, நேற்று வரை 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதில், பல்வேறு மொபைல் செயலிகளில் பணத்தை செலுத்திய பின், அந்த மொபைல் செயலியை மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் லிங்க், மொபைல் செயலி மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

தங்கம் தருகிறோம் போன்ற ஆன்லைன் விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டும்.

இதுபோன்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். ஆகவே, அதுபோன்ற செயலிகளில் பணத்தை செலுத்தி, தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என, எச்சரித்துள்ளனர்.

Advertisement