பாக்., தாக்குதல் எதிரொலி; தலைநகர் டில்லிக்கு உச்சபட்ச பாதுகாப்பு

1


புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தலைநகர் டில்லிக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தக்க பாடம் புகட்டி வரும் இந்தியா, எதிர் தாக்குதலை கடுமையாக நடத்தி வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து, ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கி வருகிறது. எல்லையிலும், ராணுவ வீரர்கள் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். முப்படைகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. எல்லை தாண்டி வந்த, பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு விமானத்தை, இந்தியா சுட்டு வீழ்த்தி உள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தை தொடர்ந்து, தலைநகர் டில்லியில் உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தை இந்தியா தாக்கி உள்ளது. அதற்கு பதிலடி தர பாகிஸ்தானும் டில்லியை தாக்க முற்படலாம் என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதிக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்கள் ஆலோசனை:



போர் பதற்றத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் முதல்வர்கள், தங்களது மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

என்.எஸ்.ஜி., கமாண்டோக்கள்:



தீவிரவாதிகளின் தாக்குதலலை முறியடிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரில், என்.எஸ்.ஜி., கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சி.ஏ., தேர்வு ஒத்தி வைப்பு:



இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, சிஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மே 9 முதல் 14 வரை நடைபெறவிருந்த, அனைத்து சி.ஏ., தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement