பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை ஏன்? வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கேள்வி

புதுடில்லி : கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேசியக்கொடியை போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகளை நடத்தியதோடு, ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றது குறித்து இந்தியா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையை துவங்கியுள்ள நம் நாடு, ஒன்பது பயங்கரவாத முகாம்களை நேற்று முன்தினம் தரைமட்டமாக்கியது.

அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக பாக்., கூறி வருகிறது.

பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கியில் நம் படையினர் நடத்திய தாக்குதலில், 'ஜமாத் -உத்- தவா' என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் மாலிக், முதாஷிர், காலித் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்களின் இறுதிச்சடங்குகள் நேற்று முன்தினம் நடந்தபோது, பாக்., ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், அவர்களின் சவப்பெட்டிகள் மீது பாக்., தேசியக்கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி, பாக்.,கின் செயலுக்கு நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே மிகத் தெளிவாக குறிபார்த்து, திட்டமிட்டு, நம் படையினர் தாக்கினர். ஆனால், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக பாக்., கூறுகிறது.

அந்த கருத்தை, பேச்சுக்காக உண்மை என வைத்துக்கொண்டாலும் கூட, சாதாரண பொதுமக்களின் இறுதிச்சடங்குக்கு அந்நாட்டு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை வழங்கப்படுமா? இது, விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள். ஒருவேளை, பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்துவது பாக்.,கின் நடைமுறையாக இருக்கலாம். ஆனால், அது நமக்கு அர்த்தமுள்ளதாக தெரியவில்லை.

ஏற்கனவே, பஹல்காம் தாக்குதலில் லஷ்கர் - -இ - -தொய்பா அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது குறித்த வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அதை ஏற்க மறுத்து, உலகின் முன் பாக்.,கின் உண்மையான நிலைமை வெளிப்பட்டது.

மேலும், தாக்குதலுக்கு பொறுப்பேற்று, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' அமைப்பே இரண்டு முறை அறிவித்த பிறகும்கூட, ஐ.நா., கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல் குறித்து தேவையற்ற கேள்விகளை பாக்., எழுப்பியது.

ஐ.நா.,வில் நடத்திய அந்த விளையாட்டானது, தடயங்களை மறைப்பதற்கு கால அவகாசம் பெறுவதற்கான முயற்சி. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாக்.,கின் எந்தவொரு அறிக்கையையும் இனிமேல், இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பஹல்காம் மட்டுமல்ல, லண்டனில் 2005ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட உலகின் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கும் பாக்., என்ற தீவிரவாத நாடே காரணமாக இருக்கிறது.

கடந்த 2001ல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் எங்கே பிடிபட்டார்? பின்லேடனை தியாகி என்று யார் அழைத்தனர்? பாக்.,கின் அபோட்டாபாதில் தான் அமெரிக்க படைகளிடம் பின்லேடன் சிக்கினார்.

பாக்.,கில் அமெரிக்க படைகள் புகுந்து பின்லேடனை கொன்றபோது, பாகிஸ்தானியர்கள் தலை குனிந்ததாகவும், பின்லேடன் தியாகி எனவும் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement