தமிழக கல்வி கொள்கையை அழிக்கும் திட்டம் 'நீட்' தேர்வு: அப்பாவு ஆவேச பேச்சு

6

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:

நீட் தேர்வில் உண்மைத்தன்மை இல்லை. நீட் தேர்வில், மது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். நம் கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, அழிக்கும் திட்டம் தான் நீட் தேர்வு. இதனாலேயே, நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது.

ஒரு இனம் அழிவதற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். மொழியை அழித்தால் போதும். எனவேதான், மொழி கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கிறது.

பெற்றோர்கள் செய்யும் தொழிலையே அவர்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும் என சொல்வதே மனுதர்மம் என்கின்றனர். அதை எப்படி தர்மம் என ஏற்க முடியும்; சொல்லப்போனால், அது அதர்மம். இது, ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தங்களில் ஒன்று.

ராமனுஜர் பற்றி யாரும் அறியாத நிலையில், புத்தகங்களை எழுதி, தொலைக்காட்சி தொடராக அதை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த நுாலை வெளியிட்டவர் நம் முதல்வர் ஸ்டாலின்.

இவர்களைத்தான், நாத்திகவாதிகள் எனச் சொல்லி, ஆன்மிகவாதிகளிடம் இருந்து பிரிக்கப் பார்க்கின்றனர். இவர்கள் எல்லா மதங்களுக்கும் சமமானவர்கள்.

தமிழகத்தில், சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் பிரச்னைகள் என்றால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலர் கைது செய்யப்படுகின்றனர். இது எதிர்கட்சியினருக்கும் தெரியும். ஆனாலும், அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டசபையில் விருப்பு-வெறுப்பின்றி, அனைவரும் பேச நேரம் அளிக்கப்பட்டது. சொல்லப்போனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்த அளவிலேயே பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement