'ஆதார்' எடுக்க போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கைது

கோவை : ஆதார் கார்டு எடுப்பதற்காக போலி 'பான் கார்டு' தயாரித்த ஆறு பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக மக்கள் வருகின்றனர்.
அவர்களுக்கு போலியாக 'பான் கார்டு' தயாரித்து, அதை வைத்து ஆதார் கார்டு எடுப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., பத்ரிநாராயணன் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார். அதில், கரூரை சேர்ந்த கும்பல் போலி பான் கார்டு தயாரித்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கரூர் சென்று, போலி பான் கார்டு பயன்படுத்தி, ஆதார் கார்டு பதிவு செய்யும் அலுவலர் கார்த்திக், ஜெயகுமார், நவீன் சேகர், சம்பத், ஸ்ரீநிவாசன், கலைவாணி ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 பான் கார்டுகள், மொபைல், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறு பேரையும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தீவிரவாத தடுப்பு பரிவு போலீசார் கூறுகையில், 'தற்போது, நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர், சட்ட விரோதமாக இங்கு வருவோருக்கு இவர்கள் 'போலி பான்' கார்டு மூலம் ஆதார் கார்டு எடுத்து கொடுக்கின்றனர். பின்னர், ஆதார் கார்டை வைத்து, புதிதாக அசல் 'பான் கார்டு' விண்ணபித்து பெற்றுக்கொள்கின்றனர். திருப்பூர், கரூர், திருச்சி போன்ற இடங்களில் பணியாற்ற வடமாநிலத்தவர்கள் பலருக்கு இவர்கள் போலி பான் கார்டு தயாரித்து கொடுத்துள்ளனர். இரண்டாயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பான் கார்டு தயாரித்து தந்துள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் போலி பான் கார்டு மூலம் ஆதார் கார்டு பெற்றுள்ளனர். மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா, வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக வந்தவர்களுக்கு ஆதார் எடுத்துள்ளனரா என்பது குறித்து விசாரிக்கிறோம்,' என்றனர்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு