சித்திரை திருவிழா: மாவட்ட கோயில்களில் திருக்கல்யாணம்

திண்டுக்கல்: சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் திருகல்யாண வைபவம் நடந்தது.

திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 29ல் கொடியேற்றுத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தனர். திருவிழாவின் 10ம் நாளான நேற்று காலை 10:20 மணிக்கு அபிராமி அம்மனுக்கும் காளஹஸ்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் மாப்பிள்ளை அழைப்பு, பூணல் மாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன், மேயர் இளமதி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, வீரக்குமார், சண்முகவேல், நிர்மலா மலைச்சாமி ஆகியோர் செய்தனர்.

பழநி : பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 2 கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடைபெறும்.

(மே 8)நேற்று மாலை 6:45மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவத்தில் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உற்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின் மாலை மாற்றுதல், பூப்பந்து எறிதல் ஆகியவை நடைபெற்றது. நாளை (மே 10) காலை 7:31 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.11., இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

வடமதுரை : மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயில் சன்னதி வளாகத்தில் நேற்று காலை விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் யாக பூஜைகளை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்தார்.

வேடசந்தூர்: காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்கான சீர் அழைத்தல், திருமஞ்சனம் பிடித்தலை தொடர்ந்து, நேற்று காலை கணபதி ஹோமம், மங்கள வாத்தியம், ஊஞ்சல் உற்சவத்துடன் காலை 11:00 மணிக்குக் சந்திரசேகர் - சவுந்திரவள்ளி திருக்கல்யாணம் நடந்தது. அர்ச்சகர்கள் நடராஜசிவம், சிவக்குமார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் : விருப்பாட்சி தலையூற்றில் நாக விசாலாட்சி அம்பிகா மற்றும் ஸ்ரீநல்காசி விஸ்வநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண வைபோக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீநாக விசாலாட்சி அம்பிகா, ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விருப்பாட்சி ஸ்ரீ ஆதி நல்காசி சிவன் அறக்கட்டளையினர் மற்றும் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.

சின்னாளபட்டி: மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வாணிய செட்டியார் சமூகத்தின் சார்பில் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமி அழைப்பு, விசேஷ பூஜைகளுடன், காந்தி மைதானத்தில் திருக்கல்யாணம் நடந்தது.

சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், கீழக்கோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளாக, சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல், பூப்பல்லக்கு ஊர்வலம் நடக்க உள்ளது.

நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் மீனாட்சி அம்மன்,சொக்கநாதர் சன்னதியில் நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜா பெருமாள் கோயிலில் மூலவருக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தலைமை அர்ச்சகர் ராஜ நரசிம்ம அய்யங்கார் நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வீரசிவபாலன், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement