பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு

5

புதுடில்லி: ''சர்வதேச பயணிகள் விமானங்களை, கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது,'' என்று இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறினார்.


இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



400 டுரோன்கள்





அப்போது, வியோமிகா கூறியதாவது: மே 7 8 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் பல முறை, மேற்கு பிராந்தியத்தில் இந்திய வான்வெளியிலும், ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கியது. காஷ்மீரின் லே பகுதியில் இருந்து குஜராத்தின் சர் கிரீக் பகுதி வரை 36 இடங்களில் 300 முதல் 400 டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அவை அனைத்தையும் இந்திய ஆயுதப்படைகள் தாக்கி அழித்தன.



முறியடிப்பு





அதிகளவு டுரோன்களை அனுப்பி இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உளவு தகவல்களை பெற பாகிஸ்தான் முயற்சித்தது. பாக்., அனுப்பிய டுரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. பஞ்சாபின் பதிண்டாவிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. இதுவும் முறியடிக்கப்பட்டது.


கடந்த 7 ம் தேதி ஏவுகுணை மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், தனது வான்வெளியை மூடவில்லை. இதனால் எல்லைப்பகுதியில் சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் விமானங்களை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையில் சிவில் விமானங்கள் பறப்பது பாதுகாப்புக்கு ஏற்றது கிடையாது. சர்வதேச விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய விமானப்படை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது.


பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் வகையில், அந்நாட்டில் உள்ள நான்கு நான் பாதுகாப்பு தளங்கள் மீது ஆயுதமேந்திய டுரோன்கள் ஏவப்பட்டன. அதில், ஒன்று வான் பாதுகாப்பு ரேடரை அழித்தது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்தது. இதில், அந்நாட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement