பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!

3


புதுடில்லி: ''இந்தியா நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுடன் சேர்த்து இந்திய ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது ,'' என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.


இரட்டை வேடம்




டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
பாகிஸ்தானின் அத்துமீறல் இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்ததுடன், ராணுவ தளங்களையும் குறி வைத்தது. இதற்கு இந்தியப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அவர்களின் இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது.


தனது நடவடிக்கைக்கு பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய ஆயுதப்படைகளே தாக்குதல் நடத்திவிட்டு, தங்கள் மீது பழிசுமத்த முயற்சி நடப்பதாக பாகிஸ்தான் பொய்யான குற்றம்சாட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். இதனை உலகம் நன்கு அறியும். தவறான தகவல்களை பரப்பி உலகத்தை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது. பாக்., தாக்குதல் திட்டம் ஒரு போதும் பலிக்காது



குழந்தைகள் உயிரிழப்பு




பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை பாகிஸ்தான் தாக்கியது. அதில் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த சிலர் உயிரிழந்தனர். ஆனால் டுரோன் மூலம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவை குறிவைத்து தாக்கியதாக அந்நாடு தவறான தகவலை பரப்புகிறது. இதுவும் அப்பட்டமான பொய். இன்று பூஞ்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கடுமையான தாக்குதலில், கிறிஸ்தவ பள்ளியில் இருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இந்த பள்ளியில் குழந்தைகள், ஆசிரியர்கள் அடைக்கலம் புகுந்தனர். நல்லவேளை இந்த பள்ளி மூடப்பட்டது. இல்லையென்றால் இழப்பு அதிகமாக இருந்து இருக்கும். மத மோதலை தூண்டுவதற்காக பாகிஸ்தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மதரீதியில் தகவலை அந்நாடு சேர்க்கிறது. தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்த்தார்பூர் வழித்தடம் அடுத்து அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.



ஆலோசனை




மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு இந்தியா அளித்த பதிலடி குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அமைச்சர் கூறினார். இதற்கு ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க முயற்சித்தால், அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் னெ தெரிவித்தார். பிரிட்டன், நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச நிதியத்தை இந்தியா அணுகும்.
இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

Advertisement