பயங்கரவாதிகளுடன் என்ன உறவு; பாகிஸ்தானுக்கு இந்தியா கேள்வி

8


லண்டன்: "பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்ததற்காக, பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தும் என்றால், பயங்கரவாதிகளுடன் அந்த நாட்டுக்கு என்ன உறவு," என்று பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதனை வெற்றிகரமாக இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யும் வகையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, பாகிஸ்தானை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி இந்தியா அழித்ததற்காக, பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்றால், பயங்கரவாதிகளுடன் அந்த நாட்டுக்கு என்ன உறவு?


பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் மீதோ, அந்நாட்டு உள்கட்டமைப்பின் மீதோ இந்தியா எந்த தாக்குதலும் நடத்தவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஷ்புல் முஹாஜிதீன் ஆகிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக, பாகிஸ்தானே போட்டோக்களை வெளியிட்டது.


கடந்த 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போதிய ஆதாரங்களை சர்வதேச அமைப்புக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியா வழங்கியது. ஆனால், அதனை பயன்படுத்தி, பயங்கரவாதிகளின் ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டது.


பிறநாடுகளிடம் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களை தற்காப்புக்காகப் பயன்படுத்துவதா அல்லது பிற நாடுகளைத் தாக்குவதா என்பதை பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement