சுரங்க பாதைகளுக்கு மேற்கூரை

உடுமலை : ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, மேற்கூரை அமைக்கப்பட்டுவருவதால், வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது, உடுமலை பகுதியில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், சிறிய, பெரிய சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.
கிராம இணைப்பு ரோடு மற்றும் இதர முக்கிய ரோடுகளின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த சுரங்கபாதைகளில், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது. இதனால், அப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
பாலப்பம்பட்டி, மருள்பட்டி, பெரியார்நகர், உடுமலை நகரம், ராகல்பாவி, அந்தியூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைந்துள்ள சுரங்க பாதைகளில், இப்பிரச்னையால் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டுவந்தது.
ரயில்வே மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நடைமுறையும் படிப்படியாக கைவிடப்பட்டது.
தற்போது இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, சுரங்கப்பாதைகளில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், உடுமலை நகரம் தளி ரோடு மேம்பாலம் அருகிலுள்ள சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் மழைக்காலங்களில், மழை நீர் உள்ளே விழாமல் தவிர்க்கப்படும். நீண்ட காலமாக நீடித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.