பாலாலயம் செய்து ஓராண்டாகியும் பணி துவங்காத அருளாலீஸ்வரர் கோவில்

அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாலீஸ்வரர் கோவில் உள்ளது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த கோவில், முறையான பராமரிப்பின்மையால், கருவறை உள்ளிட்ட கட்டட பகுதிகள் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வந்தது.

எனவே, இக்கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொண்டு வழிபாட்டிற்கு விடக்கோரி பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே, 2023, டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது, கோவில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தொடர்ந்து, அக்கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை அனுமதியின் பேரில், சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்தன.

அதன்படி, 2023, டிசம்பர்7ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை உள்ளிட்ட கோவிலின் அனைத்து சன்னிதிகளும் மூடப்பட்டன.

அதை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், கோவிலில் வழிபாடு மேற்கொள்ள இயலாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே, அழிசூர் அருளாலீஸ்வரர் கோவில் திருப்பணி விரைவாக துவங்க துறை ரீதியான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement