பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்; தலைமையாசிரியர்கள் நம்பிக்கை

உடுமலை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அதிருப்தி அளித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி நிர்வாகத்தினர் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், 18 மையங்களில், 3,911 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கடந்த 2024 கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், 3 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. ஆனால் தற்போது மூன்று வட்டாரங்களிலும், ஒரே ஒரு பள்ளி மட்டுமே, நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

மேலும்கடந்தாண்டு குறைந்தபட்சமாகவே, 94 சதவீதம் தேர்ச்சி இருந்தது. ஆனால் நடப்பாண்டில், 87 சதவீதம் வரை குறைந்து விட்டது. குறிப்பிட்ட சில பள்ளிகளிலும், முந்தைய ஆண்டை விடவும் தற்போது தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமில்லாமல், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை எதிர்பார்த்துள்ளனர்.

பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறிது கடினமாகவே இருந்தது. ஆனால் தேர்வுக்கு வந்து தேர்ச்சி பெறாமல் இருந்தவர்களை விடவும், தேர்வு வராதவர்களால், தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு எளிமையாகவே இருந்தது. மேலும், அத்தேர்வில் அதிகமான 'ஆப்சென்ட்'கள் இல்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் மட்டுமின்றி, சதம் எடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு கூறினர்.

Advertisement