விளைநிலங்களை சேதப்படுத்தும் கால்நடைகள் சொர்ணவாரிக்கு தயாராகும் விவசாயிகள் வேதனை

பொன்னேரி:பழவேற்காடு பகுதியில் இருந்து கிராமங்களுக்கு கூட்டமாக வரும் கால்நடைகள், தர்ப்பூசணி, பச்சைப்பயறு உள்ளிட்டவைகளை கடித்து சேதப்படுத்தி வருவதுடன், சொர்ணவாரிக்கான நெல் நாற்றுக்களையும் மிதித்து பாழாக்கி உள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் சம்பா, சொர்ணவாரி பருவங்களில் 45 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், சம்பா அறுவடைக்கு பின், கோடைக்கால பயிர்களாக பச்சைப்பயறு, தர்ப்பூசணி, எள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும், 5,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டன. அவை, அறுவைடைக்கு தயாராகி வருகின்றன. ஒரு சில கிராமங்களில் அறுவடை பணிகள் நடக்கின்றன. கடந்த சில நாட்களாக, பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஆசானபூதுார், வஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், கூட்டம் கூட்டமாக எருமை மாடுகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
பழவேற்காடு மீனவ பகுதியில் இருந்து வருகின்றன. மேலும், உரிமையாளர்கள் உடனிருந்தும் கண்காணிப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் தர்ப்பூசணி, பச்சைப்பயறு செடிகளை கடித்து தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பிற்கு ஆளாகி தவிக்கின்றனர். மேலும், அடுத்த மாதம் சொர்ணவாரி பருவத்திற்கு நடவு பணிகளை மேற்கொள்வதற்காக நெல் நாற்றுக்களை வளர்த்து வருகின்றனர்.
கூட்டமாக சுற்றி வரும் மாடுகள், நெல் நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர். நேற்று முன்தினம், தர்ப்பூசணி, பச்சைப்பயறு, நெல் நாற்றுக்களை சேதப்படுத்திய 30 மாடுகளை, கிராமவாசிகள் பிடித்து பட்டியில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். மாடு வளர்ப்போருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும், மாடுகளால் சேதமடையும் விவசாயிகளுக்கு, இழப்பீடு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மாடுகளை பிடித்து பராமரிக்க, கிராமங்கள்தோறும் பட்டிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயம் செய்வதே கடினமாக உள்ளது
பழவேற்காடு பகுதியில் மேய்ச்சல் பகுதிகள் இல்லை. மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். அவை, நாள்கணக்கில் கிராமங்களில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் பச்சைப்பயறு, தர்ப்பூசணி, நெல் நாற்றுக்களை கடித்தும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. மாடுகளால் விவசாயம் செய்வதே கடினமாக உள்ளது. வேளாண்மை, வருவாய், காவல் உள்ளிட்ட துறையினர் இதற்கு தீர்வு காண வேண்டும்.
- ஆர்.நாகராஜ்,
விவசாயி, வீரங்கிமேடு, பொன்னேரி.
மேய்ச்சல் பகுதியை உருவாக்க வேண்டும்
பழவேற்காடு மீனவப்பகுதியில் தோணிரவு, ஜமீலாபாத் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கிராமங்களை சுற்றிலும் ஏரியின் சதுப்பு நிலப்பகுதிகளாக இருப்பதால், மாடுகளுக்கு மேய்ச்சல் இல்லை. எனவே, பழவேற்காடு பகுதியில் மேய்ச்சல் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இவற்றை கட்டுப்படுத்த முடியும்.
- எஸ்.சத்தியநாராயணன்,
விவசாயி, மடிமைகண்டிகை, பொன்னேரி.