கேரள காங்., புதிய தலைவராக சன்னி ஜோசப் நியமனம்

திருவனந்தபுரம்: கேரள காங்கிரசின் புதிய மாநில தலைவராக பேராவூர் எம்.எல்.ஏ., சன்னி ஜோசப்பை, 72, அக்கட்சி மேலிடம் நேற்று அறிவித்தது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவிற்கும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

கடந்த 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வகையில், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

இதற்காக கட்சி நிர்வாகத்தில் காங்கிரஸ் மேலிடம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த சுதாகரன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பேராவூர் எம்.எல்.ஏ., சன்னி ஜோசப், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சன்னி ஜோசப், கண்ணுார் மாவட்டத்தின் பேராவூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக 2011லிருந்து தொடர்ந்து மூன்று முறை பதவி வகிக்கிறார். கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த ஜோசப், சட்டம் பயின்றவர். வழக்கறிஞராக பணியாற்றியவர்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கண்ணுார் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநில அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துஉள்ளார். இவருக்கு மலபார் பகுதி எனப்படும் கேரளாவின் வட மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம்.

Advertisement