காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: ஒருவர் பலி

ஜம்மு: இந்திய எல்லையோர மாநிலங்களின் மீது நேற்று முன்தினம் இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு - காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டிய பகுதிகளிலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வாயிலாகவும், பீரங்கிகள் வாயிலாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3:50 முதல் 4:45 மணி வரை இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில், லோரன் பகுதியைச் சேர்ந்த முஹமது அப்ரார் என்பவர் உயிரிழந்தார்; அவரின் மனைவி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். குண்டு வீச்சில், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்தன; நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாகின.

வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஜம்மு மற்றும் ரஜோரி மாவட்டங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன; வீடுகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சால்மரில் வெடிகுண்டு?

போர் பதற்றத்தின் நடுவே, ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற மர்மப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. பாக்., எல்லையை ஒட்டிய ராஜஸ்தானில் அந்நாட்டு ராணுவம் ட்ரோன் வழியாக தாக்குதல் நடத்தியது. கோட்வாலி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிஷாங்காட் பகுதியில், பண்ணை ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்மப்பொருள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலின் போது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்ட நிலையில், அந்நாட்டில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்களின் உதிரி பாகமாக இந்த மர்மப்பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



பஞ்சாபில் உலோக குவியல்கள்

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாபின் ஹோஷியார்பூர், பதிந்தா பகுதிகளிலும் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்திய ராணுவம் இடைமறித்தது. அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்ட நிலையில், நேற்று ஹோஷியார்பூரில் உள்ள வயல்வெளியில் ட்ரோன்களின் பாகங்கள் அடங்கிய உலோக குவியல் கண்டெடுக்கப்பட்டது. பதிந்தாவில் துங்வாலி மற்றும் புர்ஜ் மஹிமா கிராமங்களிலும் உலோக குவியல்கள் இருந்தன. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த விமானப்படை அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement