ஹிந்தி தெரியாததால் ரூ.1 லட்சம் கோடியை இழந்தேன் 'ஏர்செல்' சிவசங்கரன் வருத்தம்

புதுடில்லி: 'ஹிந்தி தெரிந்திருந்தால், நாடு முழுதும் உள்ள இந்தியர்களை ஈர்த்து, தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரனாகி இருப்பேன்' என, ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், 68, தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், சமூக ஊடக பிரபலம் ரன்வீர் அலபாடியா நடத்திய, 'பாட்காஸ்ட்' எனப்படும், 'ஆன்லைன்' ஒலி வடிவ பேட்டியில் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தன், 24 வயதில் தொழில் துவங்கியது முதல் தற்போது வரையிலான பயணத்தை விவரித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இளம் வயது முதல் பல்வேறு துறைகளில் காலுான்றி வாழ்க்கையின் பல ரகசியங்களை நான் கற்றுக் கொண்டேன். முக்கியமான இரண்டு விஷயங்களை செய்யாததால் பெரிய இழப்பை சந்தித்துள்ளேன். அது ஹிந்தி கற்றுக்கொள்ளாததும், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடம்பெயராததும் தான்.
நான் ஹிந்தி கற்றுக் கொண்டிருந்தால், 140 கோடி இந்தியர்களையும் ஈர்த்திருப்பேன். அதுபோல், டில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தால் தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகி இருப்பேன்.
வாழ்க்கையில் கடன் வாங்குவதைவிட, பணத்தை ஈர்க்கும் திறனே வெற்றிக்கு அடிப்படை.
இவ்வாறு அவர் கூறினார்.


