வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு... களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்

அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக இன்று(மே 10) மாலை 6:00 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார்.
இன்று மாலை சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இதைதொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். கோயிலை காக்கும் 18ம் படி கருப்பணசுவாமியிடம் 'சென்று வருகிறேன்' என்றுக்கூறி விட்டு தங்கப்பல்லக்கில் வேல் கம்புடன் புறப்படுகிறார். நாளை காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கும்.
இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமிக்கு பூஜை நடக்கிறது. மே 12 அதிகாலை ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். மதியம் 12:00 மணிக்கு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பர்.
இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மே 13 சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மதியம் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து மறுநாள் அதிகாலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார்.மே 14 மதியம் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 16 காலை 10:00 மணி முதல் 10:25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.
மண்டகப்படிகள் ஏன்
இன்று புறப்படும் கள்ளழகர், வரும் வழியில் 494 மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார். அக்காலத்தில் திருவிழாவிற்காக மக்கள் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு 10 நாட்கள் வரை வைகை கரையோரம், கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கினர். அவர்களின் தேவைகளுக்காக நீர், மோர் பந்தல், உணவு வழங்கப்பட்டது. தங்கி செல்ல மண்டபங்கள் கட்டப்பட்டன. பக்தர்களை தேடிவந்து அங்கு சுவாமி எழுந்தருளுவார். அது இன்றும் தொடருவது சித்திரைத்திருவிழாவின் சுவராஸ்யம்.