'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு

2

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரை பதிவு செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்திய பாதுகாப்பு படைகள், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு 'ஆப்பரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டது. தாக்குதல் தொடர்பான செய்தி வெளியானது முதல், இந்த பெயர் சமூக ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இடையே மிகவும் பிரபலமானது. இந்த பெயரில் வர்த்தக முத்திரையை பதிய தனி நபர்கள் உட்பட நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வந்தன.


தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ' ஜியோ ஸ்டூடியோஸ்' இந்த பெயரில் வர்த்தக முத்திரையை பதிய விண்ணப்பித்தது. பிறகு அதனை திரும்ப பெற்றுக் கொண்டது. மும்பையைச் சேர்ந்த தனி நபர் ஒருவர்,ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 11 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைவரும் வர்த்தக முத்திரையின் 41வது பிரிவின் கீழ் விண்ணப்பித்து உள்ளனர்.கல்வி, திரைப்படம், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கும் பெயர்கள் இந்த பிரிவின் கீழ் பதியப்படும். ஓ.டி.டி., தளங்கள் தான் இந்த பிரிவை அதிகம் பயன்படுத்தும். எனவே, இந்திய பாதுகாப்பு படைகளின் தாக்குதலை மையமாகக் கொண்டு திரைப்படம், வெப் சீரீஸ் அல்லது குறும்படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இதற்கு எதிராக டில்லியில் பயிற்சி பெற்று வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் தேவ் ஆஷிஷ் துபே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பஹல்காமில் நடந்த படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை துவக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில் இந்த நடவடிக்கை உணர்வுப்பூர்வமாக தொடர்புடையது. இந்த பெயரில் வர்த்தக முத்திரை பதிவு செய்வது என்பது 1999 ம் ஆண்டு வர்த்தக முத்திரை சட்டத்தின் 9வது பிரிவுக்கு எதிரானது. பொது மக்களின் உணர்வ பாதிக்கும். எனவே, மக்களின் தியாகம் மற்றும் ராணுவ வீரர்கள் தொடர்பான பெயர் வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதுடன், வர்த்தக முத்திரை வழங்க அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement