முகமது அப்சல் தேசிய சாதனை: 800 மீ., ஓட்டத்தில் அசத்தல்

துபாய்: யு.ஏ.இ., தடகளத்தின் 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அப்சல் தேசிய சாதனை படைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 'கிராண்ட் ப்ரி' தடகளம் நடந்தது. ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அப்சல் 29, பங்கேற்றார். ஆசிய விளையாட்டில் (2023) வெள்ளி வென்ற அப்சல், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 45.61 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்தார். தவிர இவர், 7 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன் 2018ல் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் இலக்கை ஒரு நிமிடம், 45.65 வினாடியில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது. இருப்பினும் அப்சல், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறத்தவறினார். இதற்கான தகுதி இலக்காக ஒரு நிமிடம், 44.50 வினாடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனிமேஷ் முதலிடம்: ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இலக்கை 20.45 வினாடியில் கடந்த இந்தியாவின் அனிமேஷ் குஜுர் முதலிடம் பிடித்தார். சமீபத்தில் முடிந்த பெடரேஷன் கோப்பையில் பந்தய துாரத்தை 20.40 வினாடியில் கடந்த இவர், தேசிய சாதனை படைத்திருந்தார். மற்றொரு இந்திய வீரர் அம்லான் (20.52 வினாடி) 5வது இடத்தை கைப்பற்றினார்.

Advertisement