ஆப்பரேஷன் சிந்துார் அதிரடியில் பலியான பயங்கரவாதிகள் யார்?

1

புதுடில்லி:பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை, இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.

பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதில், முக்கியமான ஐந்து பயங்கரவாதிகளின் விபரம் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கை பாகிஸ்தான் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

ஹபீஸ் முகமது ஜமீல்



ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மூத்த மைத்துனர். பஹவல்பூர் பயங்கரவாத முகாமின் தலைமை பொறுப்பு வகித்தவர். அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை மூளைச்சலவை செய்வது இவரின் பங்கு.

முகமது யூசுப் அசார்



பயங்கரவாதி மசூத் அசாரின் மற்றொரு மைத்துனர்; 1999ல் காந்தகார் விமான கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர்.

இச்சம்பவம் வாயிலாக, மசூத் அசார் இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட காரணமாக இருந்தவர். பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி அளிப்பது இவரது வேலை. ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாத செயல்களை நடத்தியவர்.

முத்தசார் காதியன் காஸ்



லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தான் முரிட்கே. இந்திய - பாக்., எல்லையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த முகாமின் தலைவராக செயல்பட்டவர்.

மும்பை தாக்குதல் வழக்கில் துாக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார். பாகிஸ்தான், இவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளித்தது. அந்நாட்டு அரசு பள்ளிகளில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

காலித்



லஷ்கர் - இ -தொய்பா பயங்கரவாதி. ஜம்மு - காஷ்மீரில் பல பயங்கர வாத தாக்குதல்களில் தொடர்புடையவர். பைசாலாபாதில் நடந்த இவரது இறுதி ஊர்வலத்தில் ராணுவம், போலீஸ், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

முகமது ஹாசன் கான்



ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத அமைப்பின் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் கமாண்டர் முப்தி அஸ்கார் கானின் மகன். காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒருங்கிணைத்தது, சதித்திட்டம் தீட்டியது இவரது பணி.

Advertisement