தேரோட்டத்தில் மரியாதை இல்லை எனக்கூறி அறநிலையதுறை அலுவலகம் புகுந்து தாக்குதல் வீரபாண்டி தி.மு.க., பேரூராட்சி தலைவர், கணவர் மீது புகார்

தேனி:தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக்கூறி ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து பணியாளர்களை தாக்கிய தி.மு.க.,வை சேர்ந்த வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, அவரது கணவர் சசி மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் கோயில் செயல் அலுவலர் நாராயணி புகார் அளித்துள்ளார்.


வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சிவபிரசாத், தி.மு.க., வைச் சேர்ந்த வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பின் தேர் வடம் பிடித்து இழுத்து கோயில் அருகே நிறுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சி முடிந்த பின் பேரூராட்சி தலைவர் கீதா, அவரது கணவர் சசி, அவரது ஆதரவாளர்கள் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு சென்று, பரிவட்டம் கட்டுவதில் பாகுபாடு காட்டியதாக கூறி அலுவலகத்தில் பணியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி கோயில் செயல் அலுவலர் நாராயணி கூறுகையில், 'தேர்திருவிழாவில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர், மாவட்ட அதிகாரிகளுக்கு மாரியாதை செய்வது வழக்கம். அவ்வாறு செய்ததில் தங்களுக்கு முன்கூட்டியே மரியாதை செய்யவில்லை என எனது அலுவலகத்திற்குள் வந்த பேரூராட்சி தலைவர், அவரது கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், நாதஸ்வர வித்வான் வீரமணி ஆகியோரை தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்,' என்றார்.

கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் கீதா அளித்த புகாரில், ' தேரோட்டத்தில் மாவட்ட அலுவலர்களுக்கு அடுத்து பேரூராட்சி தலைவருக்கு மரியாதை செய்யப்படும். இந்தாண்டு வழக்கத்தை மாற்றினர். இதுபற்றி கேட்ட போது அலுவலகம் வரக்கூறினர். அலுவலகத்தில் இருந்து உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நாராயணி, ஊழியர்கள் பாலு, பழனியப்பன், வீரமணி ஆகியோர் ஜாதிய வெறுப்புடன் பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரி உள்ளார்.

Advertisement